search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ஆவணங்கள்"

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அலுவலகங்களில் போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை பதிவு செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில்தான் இந்த மோசடி அதிகளவு நடந்திருப்பது பத்திரப்பதிவு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மதுரை சப்- ரிஜிஸ்டர் ஆபீஸ் மற்றும் திருநெல்வேலி மண்டலத்திலும் இந்த மோசடி அதிகளவு நடந்துள்ளது.

    இந்த ஆய்வின் புள்ளி விவரங்களின்படி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழகம் முழுவதும் 2700 புகார்கள் பதிவாகி இருந்தன.

    இந்த மோசடிகள் அனைத்தும் 2011-ம் ஆண்டு முதல் 2017 வரை நடந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 1000 புகார்கள் வந்துள்ளன. சென்னை மண்டலத்தில் 64 சப்-ரிஜிஸ்டர் அலுவலகங்கள் நகரப் பகுதியிலும் மற்றவை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் இயங்கி வருகின்றன. இந்த பதிவு அலுவலகங்களில்தான் அதிகளவு மோசடிகள் நடந்துள்ளன.

    சென்னையை தொடர்ந்து மதுரை மண்டலத்தில் 390 புகார்களும், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 125 புகார்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தில் 250 முறைகேடான சொத்து பதிவு செய்யப்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன.

    சேலம் மண்டலத்தில் 240-ம், திருச்சியில்-225, வேலூரில் 170, கோவையில் 135, கடலூரில் 120 புகார்களும் பதிவாகி இருந்தன.

    சொத்துக்களை விற்க ‘பவர்’ கொடுத்து பின்னர் அதனை நீக்கியது போன்று இந்த மோசடி பதிவு நடைபெற்று இருப்பதாக மாவட்ட பதிவாளர்களுக்கு புகார்கள் வந்ததையடுத்து பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பெறப்பட்ட 2700 புகா ரில் 1100 புகார்கள் மீது விசாரணை நடத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அதனை தடை செய்து உண்மையான சொத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×